வணிக வளாகத்தினுள் புகுந்த வாகனம்: 5 பேர் படுகாயம்!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தப்பித்து ஒடிய வாகனம் வணிக வளாகத்தினுள் புகுந்ததில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், அந்த வாகன ஒட்டுநரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
டெக்ஸாஸ் மாகாண நெடுஞ்சாலை காவல்துறையினர் நேற்று (டிச.21) மாலை 5 மணியளவில் நடத்திய சோதனையின்போது தப்பிய அந்த வாகனத்தை சுமார் 32 கி.மீ தொலைவுக்கு காவல்துறையினர் விரட்டிச் சென்றுள்ளனர்.
அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் குடிபோதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தப்பிய ஒடிய அந்த ஒட்டுநர் தெற்கு டல்லாஸின் கில்லீன் நகரத்திலுள்ள ஒரு வணிக வளாகத்தினுள் அவரது வாகனத்தைச் செலுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தை கார் தாக்குதலில் 7 இந்தியர்கள் படுகாயம்!
இதில் அந்த வணிக வளாகத்தின் கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டு அந்த வாகனம் உள்ளே புகுந்து அங்கிருந்த வாடிக்கையாளர்களை மோதியுள்ளது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இருப்பினும், அந்த வாகனத்தை அதன் ஒட்டுநர் நிறுத்தாததினால் அவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 5 பேரும் 6 முதல் 75 வயதைச் சேர்ந்தவர்கள் என டெக்ஸாஸ் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட ஒட்டுநர் குறித்த தகவல் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், அவர் தப்பித்து செல்வதற்காகதான் அந்த வணிக வளாகத்தினுள் வாகனத்தை செலுத்தினாரா, இல்லை திட்டமிட்டு செய்தாரா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.