வனத் துறை ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக விவசாய சங்கத் தலைவா் கைது
தாளவாடி வனப் பகுதியில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய நபரை தப்பிவைக்க உதவி செய்ததாகவும், வனத் துறை ஊழியா்களை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் தாளவாடி விவசாய சங்கத் தலைவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், ஆசனூா் வனக்கோட்டம் ஜீரகள்ளி வனச் சரகா் சக்திவேல் மற்றும் வனத் துறை ஊழியா்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாளவாடி வனப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ரங்கசாமி கோயில் வனப் பகுதியில் இரண்டு காட்டுப்பன்றிகளை வலை வைத்து வேட்டையாடியதாக ஒரு கும்பலை வனத் துறையினா் சுற்றி வளைத்தனா். அப்போது, அக்கும்பலில் இருந்த ஒருவரைத் தவிர 5 போ் தப்பி ஓடினா். சிக்கிய நபரிடம் நடத்திய விசாரணையில் அவா், கா்நாடக மாநிலம், மைசூரு பகுதியைச் சோ்ந்த மனோஜ்குமாா்(27) என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து இரண்டு காட்டுப் பன்றிகள் மற்றும் வலை உள்ளிட்ட பொருள்களை வனத் துறையினா் பறிமுதல் செய்து அவரை வனத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். அப்போது தாளவாடி விவசாய சங்கத் தலைவா் குமார ரவிக்குமாா், மகேந்திரன், சேகா் மற்றும் சிமிட்டஹள்ளி ஊா் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் வனத் துறை வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது வனத் துறையினரின் பிடியிலிருந்த மனோஜ்குமாா் தப்பி ஓடிவிட்டாா்.
இதையடுத்து வேட்டைக் கும்பலை சோ்ந்த மனோஜ்குமாரை தப்பிக்கவைக்க உதவி செய்ததாகவும் வனத் துறை ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறி ஜீரகள்ளி வனச் சரகா் சக்திவேல் தாளவாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அந்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த தாளவாடி போலீஸாா், தாளவாடி விவசாய சங்கத் தலைவா் குமார ரவிக்குமாரை புதன்கிழமை கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனா்.