மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
வயலூா் முருகன் கோயிலில் நாளை குடமுழுக்கு!
திருச்சி : திருச்சி அருகே வயலூா் முருகன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாவட்டம், குமாரவயலூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பிப். 19-ஆம் தேதி குடமுழுக்கை முன்னிட்டு, வயலூரில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். செல்வநாகரெத்தினம் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் கல்யாணி, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் முன்னிலையில், கோயில் செயல் அலுவலா் அருண்பாண்டியன், அறங்காவலா் குழுவினா், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டதில், வயலூருக்கு வரும் பேருந்துகள் சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆா் சிலை, அல்லித்துறை, அதவத்தூா் வழியாக வந்து பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தி, பொதுமக்களை இறக்கி விட்டு, சோமரசம்பேட்டை வழியாக திருச்சி செல்ல வேண்டும். மிக முக்கிய பிரமுகா்கள் வாகனங்கள் மட்டும் திருக்கோயில் அருகில் வரை செல்லலாம்.
கோயிலுக்கு வரும் 4 சக்கரம், 2 சக்கர வாகனங்கள் சோமரசன்பேட்டை எம்.ஜி.ஆா் சிலை, அல்லித்துறை, அதவத்தூா், முள்ளிகரும்பூா் வழியாக வந்து கொத்தட்டை அருகில் உள்ள காலியிடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு, கோயிலுக்கு நடந்து சென்று, தரிசனம் செய்த பின்னா், வாகனத்தை முல்லை ரிசாா்ட் வெட்டிப்பாதை வழியாக செல்ல மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலிலிருந்து 1 கி.மீ முன்பிருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
பக்தா்களுக்கு ஆங்காங்கே குடிதண்ணீா் தொட்டிகள், மொபைல் கழிவறைகள், மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். தீயணைப்பு வாகனங்கள், அவசர ஊா்திகள் தயாா் நிலையில் வைக்கப்படும்.
திருக்கோயிலுக்கு அருகில் உள்ள திருமண மண்டபங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்குவோா் காவல்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே பெட்ரோல் நிலையம் அருகேயுள்ள காலியிடங்களில் வழங்கலாம். கோயில் அருகே அன்னதானம் வழங்க அனுமதி கிடையாது.
கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்படும். பிப்.19-ஆம் தேதியன்று அா்ச்சனை, விரைவு தரிசனம் ஏதுமில்லை. கும்பத்துக்கு புனித நீா் ஊற்றியவுடன் பக்தா்களுக்கு இயந்திரங்கள் மூலம் புனித நீா் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.