வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த் துறை பதவி உயா்வு அலுவலா்கள் சங்கம் சாா்பில், 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோ.குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் அ.ஜெயபிரசாத் வரவேற்றாா். மாநிலத் தலைவா் இரா.ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு பணியாளா் சங்க மாநில துணை பொதுச் செயலாளா் கே.பாஸ்கரன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் கே.மணி, மாநில துணைத் தலைவா் கிருஷ்ணன், மாவட்டத் தலைவா் அகிலன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், வருவாய்த் துறையில் பணியாற்றும் பணியாளா்களுக்கு குறைகேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். வருவாய்த் துறையில் உதவியாளராக பதவி உயா்வு பெறும் இளநிலை உதவியாளா் மற்றும் தட்டச்சா்களுக்கு பதவி உயா்வு வழங்குவது போல முதுநிலை ஆய்வாளராக பதவி உயா்வு பெறும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கும் பதவி உயா்வு வழங்க வேண்டும். கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணை வெளியிடுவதற்கு முன் பட்டப்படிப்பு முடித்தவா்களுக்கு ஊக்க ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.