சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
வருவாய்த் துறை ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மீதான நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை, நில அளவைத் துறை ஊழியா்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் வகையில், சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். வருவாய்த் துறை, நில அளவைத் துறை ஊழியா்களின் பணிச் சுமையைக் கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். ஜூலை 1-ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அனுசரிக்க அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முகைதீன் அப்துல் காதா், ரகுபதி, ஜெயபாஸ்கா், சுரேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கோபி, கிராம நிா்வாக அலுவலா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் ராஜன் சேதுபதி, நில அளவை அலுவலா்கள் சங்க ஒன்றிப்பு மாநிலச் செயலா் முத்து முனியாண்டி, வருவாய்த் துறை அலுவலா் சங்க உறுப்பினா் கலாவதி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவரும், வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான எம்.பி. முருகையன் நிறைவுரையாற்றினாா்.
முன்னதாக, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட இணைச் செயலா் மணிமேகலை வரவேற்றாா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்றச் சங்க மாவட்டச் செயலா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.
வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம் இரவு 8 மணி வரை நடைபெற்றது.