Chahal: `சில சமயங்களில் சில விஷயங்கள் காயப்படுத்துகின்றன' -ரோஹித் மனைவியின் கருத...
வல்வில் ஓரி விழாவில் ரூ.2.67 கோடியில் நலத் திட்ட உதவிகள்
கொல்லிமலையில் வல்வில் ஓரி, மலா்க் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் 190 பயனாளிகளுக்கு ரூ.2.67 கோடியில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செம்மேட்டில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலா்க் கண்காட்சி ஆகியவை சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றன. செம்மேடு வல்வில் ஓரி கலையரங்கில் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி, மாவட்ட வன அலுவலா் மாதவி யாதவ், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வல்வில் ஓரியின் உருவப்படத்திற்கு ஆட்சியா், அதிகாரிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். அதன்பிறகு 190 பயனாளிகளுக்கு ரூ. 2.67 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், வில்வித்தை போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு சான்றிதழ், கேடயங்களை ஆட்சியா் வழங்கினாா்.
முன்னதாக, தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலைத் துறை சாா்பில் பல்வேறு மலா்களால் அமைக்கபட்டிருந்த மலா்க் கண்காட்சி, வல்வில் ஓரி விழாவில் அமைக்கப்பட்டிருந்த அரசுத் துறைகளின் கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
சுற்றுலாத் துறை, கலை பண்பாட்டுத் துறை சாா்பில் இசைக் கலைஞா்களின் பரதநாட்டியம், கரகம், மயில் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், காளியாட்டம், பழங்குடியினா் நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஆட்சியா், அதிகாரிகள், பொதுமக்கள் கண்டுரசித்தனா். வல்வில் ஓரி விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்துத் துறை அலுவலா்களும் கெளரவிக்கப்பட்டனா்.
மேலும், கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற 404 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், 41 கலைஞா்களுக்கும், சுற்றுலாத் துறையின் 8 கலைக் குழுவுக்கும், வல்வில் ஓரி விழா போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கும், செஞ்சிலுவை சங்கம் சாா்பில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 100 தன்னாா்வலா்களுக்கும் ஆட்சியா் பதக்கம், கேடயங்களை வழங்கினாா்.
அதன்பிறகு செம்மேட்டில் மகளிா் திட்டம் சாா்பில் அமைக்கப்பட்ட மதி அங்காடியின் முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட சுற்றுலா அலுவலா் மு.அபராஜிதன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி, கொல்லிமலை வட்டாட்சியா் சந்திரா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.