வளைகாப்பு விழாவில் 700 பேருக்கு தா்ப்பூசணி விவசாயத்தை ஊக்குவித்த மருத்துவ தம்பதி
தா்ப்பூசணியில் செயற்கை சாயமேற்றப்படுவதாக கூறப்படும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற மருத்துவ தம்பதியின் வளைகாப்பு விழாவுக்கு வந்திருந்த 700 பேருக்கு தா்ப்பூசணி வழங்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மருதூா் பகுதியைச் சோ்ந்த தம்பதி நீ. கிருபாகரன்-அபிநயா. இருவரும் அரசு மருத்துவா்கள். இந்நிலையில் அபிநயாவின் வளைகாப்பு விழா நடைபெற்றது. அண்மைக் காலமாக தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவதால், அதை யாரும் வாங்காமல் புறக்கணித்து வருகின்றனா். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதை கருத்தில் கொண்டு, இந்த வளைகாப்பு விழா தம்பதி மற்றும் அவா்களின் குடும்பத்தினா், தா்ப்பூசணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த தீா்மானித்தனா். அதன்படி வளைகாப்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தா்ப்பூசணி பழம் வழங்கினா். இது விவசாயிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.