வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்
பிகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரைக் கூட்டத்தில், அடையாளம் தெரியாத நபர், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளைக் கூறிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிருக்கிறது.
அந்த சம்பவத்தின்போது, நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இல்லை. விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைக் ஒன்றை, அடையாளம் தெரியாத நபர் எடுத்து, மோடியின் தாய் குறித்து அவதூறாக பேசியதால், பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், ராகுல் காந்தி இது குறித்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியின் மறைந்த தாய் குறித்து, ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் பங்கேற்கும் நிகழ்ச்சி மேடையில் மிக மோசமான கருத்து தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வு ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மீண்டும் ஒரு முறை இவ்வாறு நிகழக்கூடாது. அரசியலில் இதுபோன்ற ஒரு ஒழுங்கீனத்தைப் பார்த்ததேயில்லை. அவமரியாதை, வெறுப்பு மற்றும் வன்முறை என அனைத்திலும் இந்த யாத்திரை எல்லையைத் தாண்டி வருகிறது என்று பதிவிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கு, ராகுலும் தேஜஸ்வியும் ஆயிரம் முறை தோப்புக்கரணம் போட்டு மன்னிப்புக் கேட்டாலும் பிகார் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.
பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஹிந்தியில் பதிவிடப்பட்டிருந்த அந்த பதிவில், தேஜஸ்வி யாதவ் மற்றும் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரை இந்த யாத்திரையில் பங்கேற்க வருமாறு அழைத்திருக்கிறாக்ள. இது பிகார் மக்களுக்கு நடத்தப்பட்ட அவமரியாதையாகும் என்று குறிப்பிட்டுள்ளது.