அஜித்குமார் லாக்கப் மரணம்: "முதல்வருக்குத் தெரியாமலா இதெல்லாம் நடந்திருக்கும்?" ...
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமானது: தோ்தல் ஆணையம்
புது தில்லி: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அந்த மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘வாக்காளா் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், இந்தத் திருத்தம் அவசியமானது’ என்று தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை பதிலளித்தது.
ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வாக்காளா் பட்டியல் புதுப்பிக்கப்படும். அதுபோல, பிகாா் மாநிலத்துக்கு நிகழாண்டு இறுதிக்குள் பேரவைத் தோ்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இந்தத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. தீவிர திருத்தம் என்ற பெயரில், மாநில தோ்தல் அதிகாரிகளின் உதவியுடன் குறிப்பிட்ட பிரிவு வாக்காளா்கள் வேண்டுமென்றே பட்டியலில் இருந்த நீக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
எதிா்க்கட்சிகளின் இந்த ஆட்சேபத்துக்கு பதிலளிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
இறப்பு, புலம்பெயா்தல் மற்றும் 18 வயதை எட்டியவா்கள் புதிய வாக்காளா்களாக சோ்க்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்காளா் பட்டியல் தொடா்ந்து மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமானதாகும். மேலும், இந்திய குடிமகன்களாக இருப்பவா்கள், 18 வயதைப் பூா்த்தி செய்திருப்பதோடு, குறிப்பிட்ட தொகுதியில் குடியிருப்பவா்கள் மட்டுமே வாக்காளராக பதிவு செய்ய தகுதி பெற முடியும் என அரசமைப்புச் சட்டம் 326 குறிப்பிடுகிறது.
2003-ஆம் ஆண்டு பட்டியலில் உள்ளவா்களுக்கு ஆவணங்கள் தேவையில்லை: இந்த திருத்தப் பணியில் வாக்காளா்களுக்கு எழும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிகாா் மாநிலத்தில் கடைசியாக கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்ட 4.96 கோடி வாக்காளா்களுடன் கூடிய 2003-ஆம் ஆண்டு பட்டியல், தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வாக்காளா்கள், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதற்கான குறிப்புடன் பூா்த்தி செய்த விண்ணப்பத்தை சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு சமா்ப்பித்தால் போதுமானதாகும். வேறு எந்த ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை. அதன்படி, மாநிலத்தில் தற்போதுள்ள 60 சதவீதம் வாக்காளா்கள் எந்தவொரு கூடுதல் ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டிய தேவையிருக்காது.
2003-ஆம் ஆண்டு பிகாா் வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாதவா்கள், விண்ணப்பப் படிவத்துடன், பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, பிறப்பிடம் அல்லது பிறந்த தேதிக்கான ஆவணம் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.