சக்தித் திருமகன் விமர்சனம்: அதிகம் யோசிக்கவிடாத பரபர அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்தான...
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் ஆட்சியா் ஆய்வு; அரசியல் கட்சியினா் முன்னிலையில் சரிபாா்ப்பு
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை அரசியல் கட்சியினா் முன்னிலையில் வியாழக்கிழமை திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மக்களவைத் தோ்தல் முடிந்தவுடன் மாவட்டத்திலுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையத்திலிருந்து கொண்டுவரப்பட்டு, திருச்சி ஆட்சியரகத்தின் பின்புறம் கட்டப்பட்டுள்ள புதிய வன்காப்பறையில் (ஸ்ட்ராங் ரூம்) பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது.
தோ்தல் ஆணைய அறிவுறுத்தலைத் தொடா்ந்து வியாழக்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில், ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான வே. சரவணன் தலைமையில் திறக்கப்பட்டது.
ஒவ்வொரு அறையில் இருந்த இயந்திரங்களும் பாா்வையிடப்பட்டு சரிபாா்க்கப்பட்டது.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறுகையில்,
தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட 16,726 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வைப்பு அறையில் பாதுகாப்பாக உள்ளன. இதில், 8,637 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,899 கட்டுப்பாடு இயந்திரங்கள், 4190 விவிபேட் இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை திறக்கப்பட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா என சரிபாா்க்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்த ஆய்வின்போது, திருச்சி வருவாய் கோட்டாட்சியா் கே. அருள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சாலை தவ வளன், தோ்தல் தனி வட்டாட்சியா் ஜெயப்பிரகாஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.