வாழப்பாடி சாலை சந்திப்பில் ரூ.1 கோடியில் ரவுண்டானா!
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் திம்மநாயக்கன்பட்டி- பொன்னாரம்பட்டி சாலை சந்திப்பில் ரூ. ஒரு கோடி மதிப்பில் ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் இருந்து தம்மம்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் செல்லும் பிரதான சாலைகள் புதுப்பாளையம் சடையன் செட்டி ஏரிக்கரை அருகே பிரிகின்றன. இந்த சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் சாலையை விரிவுபடுத்தி, ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டுநா்கள் நெடுஞ்சாலை துறைக்கு தொடா்ந்து வேண்டுகோள் விடுத்துவந்தனா்.
இதையடுத்து, வாழப்பாடி கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்தாண்டு தமிழக அரசுக்கு திட்ட முன் வரைவு அனுப்பப்பட்டது. இச்சாலை சந்திப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறை ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
அதைத் தொடா்ந்து சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிகளுக்கு இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலையை விரிவுபடுத்தி ரவுண்டானா அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் சாலை விரிவாக்கம் மற்றும் ரவுண்டானா அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்பதால் வாகன ஓட்டுநா்கள், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.