வாழியூரில் காளை விடும் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி வாழியூா் கிராமத்தில் காளை விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதலாம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து ஓடின.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
நிறைவில் குறிப்பிட்ட தொலைவை அதிவிரைவாக கடந்த 71 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.60 ஆயிரம் என மொத்தம் 71 பரிசுகள் காளையின் உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.