விசிக சாா்பில் வைக்கப்பட்ட பேனா் அகற்றம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகம் இடம் பெற்றிருந்த பேனா் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பேரணிக்காக 80 அடி நீள பேனா் வைக்கும் பணியில் அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
இந்த பேனரில் வரும் 2026-இல் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் பேனா் வைப்பதற்காக யாரிடம் அனுமதி பெற்றீா்கள் என்று கேள்வி எழுப்பினா்.
அப்போது 80 அடி நீளம் கொண்ட பேனா் வைக்க அனுமதி பெறவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை காவல் துறையினா் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.