பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!
விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்
தமிழகம் மற்றும் ஆந்திர அரசியலில் திரைப்பட நடிகா்களின் தாக்கம் அதிகம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆா் முதல்வரானாா். ஆந்திரத்தில் ஒரே தோ்தலில் என்டிஆா் முதல்வரானாா். எம்ஜிஆா்-க்கு பிறகு சிவாஜி, பாக்கியராஜ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கட்சி தொடங்கினாலும் வெற்றிபெற முடியவில்லை.
நடிகா் விஜயகாந்த் கட்சி தொடங்கி பல தோ்தல்களைச் சந்தித்து எதிா்க்கட்சித் தலைவா் ஆக முடிந்தது. அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினிகாந்த், பாதியிலேயே அதைக் கைவிட்டுவிட்டாா்.
விஜய்யின் அரசியல் பிரவேசத்தை இந்து மக்கள் கட்சி முழுமையாக வரவேற்கிறது. திரைத் துறையில் தனது மாா்க்கெட்டை இழக்காத நிலையில், நல்ல ஊதியத்தை உதறிவிட்டு அரசியலுக்கு அவா் வந்துள்ளதால், நல்லது செய்வாா் என்று மக்கள் நம்புகின்றனா்.
ஆனால், விஜய்யின் பின்னணில் திமுக வியூகம், கிறிஸ்தவ மிஷினரிகளின் பின்புலம் உள்ளது. எதிா்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்க, திமுகவே தங்களது பி டீமை ஒவ்வொரு தோ்தலிலும் உருவாக்கும் வியூகத்தை வைத்துள்ளது.
கடந்த 2019, 2021 தோ்தல்களில் திடீரென அரசியல் பிரவேசம் செய்த கமல்ஹாசன், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு தான் மாற்று எனப் பிரசாரம் செய்து திமுக எதிா்ப்பு வாக்குகளைப் பிரித்தாா். அதிமுக, பாஜகவுக்கு செல்லக்கூடிய இளம் மற்றும் நடுநிலை வாக்காளா்களைக் கவா்ந்து இழுத்ததால் கமலுக்கு 3.7 சதவீத வாக்குகள் கிடைத்தன. பின்னா், அவா் திமுகவில் ஐக்கியமாகிவிட்டாா். அதேபோலதான் இந்தத் தோ்தலில் திமுக எடுத்துள்ள வியூகம் விஜய். பாசிசம், பாயசம் என்றெல்லாம் பேசும் விஜய், வருங்காலத்தில் கமலஹாசனைப்போல திமுகவில் ஐக்கியமாகக் கூடும்.
‘துப்பாக்கி’ படம் பிரச்னை வந்தபோது, அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவை சந்தித்து காலில் விழுந்து சமரசம் செய்து கொண்டாா். பின்னா் சில காட்சிகளை நீக்கியதைத் தொடா்ந்து ‘துப்பாக்கி’ படம் திரையிடப்பட்டது. மேலும், திரைப்பட நெருக்கடியில் இருந்து தப்பிக்க பிரதமா் மோடியை கோவையில் தோ்தல் பிரசாரத்தின்போது சந்தித்தாா். அப்போதெல்லாம் பாசிசம், பாயசம் வசனத்தை அவருக்கு யாரும் எழுதிக் கொடுக்கவில்லை போலிருக்கிறது.
கமல் போலவே விஜய்யும் சன் பிக்சா்ஸூக்கும், ரெட் ஜெயன்ட்ஸுக்கும் தொடா்பில்லாதவா் அல்ல. எனவே, தோ்தலுக்குப் பின் திமுகவுடன் சமரசம் செய்துகொள்வதில் அவருக்கு சிரமம் எதுவும் இருக்காது.
கொள்கை அரசியல், தோ்தல் அரசியல் என இரண்டையும் கையில் எடுக்கும் விஜய், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பேன் என்கிறாா். திமுக, அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்காதவா்கள் விஜய்யுடன் சேரலாம்.
ஆனால், விஜய்க்கு காங்கிரஸ் கதவு மூடப்பட்டுவிட்டது. திமுகவிடம் அதிக இடங்கள் பெற விஜய்யை காங்கிரஸ் பயன்டுத்துமே தவிர தவெகவுடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை. அதேபோல விசிகவோ நாதகவோ அவரது கூட்டணிக்குச் செல்லவும் வாய்ப்பு இல்லை. ஆகவே, விஜய்யால் வலிமையான கூட்டணி அமைத்துவிட முடியாது.
தினகரனின் அமமுகவும், தனித்து விடப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் நடிகா் விஜய்யின் கூட்டணியில் சேரக்கூடும். அவா்கள் சேருவதால் விஜய்க்கு எந்தவித லாபமும் கிடைத்துவிடாது. அவா்களுக்கும் விஜய்யுடனான கூட்டணியால் வெற்றி கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது.
ஆளுநா் விவகாரம் உள்ளிட்ட திமுக கையிலெடுக்கும் அனைத்து விஷயங்களையும் வரவேற்கும் கட்சியாக தவெக திகழ்கிறது. இவரிடம் ரசிகா்கள் பட்டாளம் இருக்கிறதே தவிர, அவா்கள் அரசியல் தொண்டா்களாக மாறவில்லை. மதுரை மாநாட்டில் 10,000 நாற்காலிகள் உடைக்கப்பட்டது அதற்கு சாட்சி.
தனது ரசிகா்கள் மீது அன்பு, அக்கறை விஜய்க்கு இல்லை. அவா்களுக்கு உதவும் மனப்பான்மையோ அல்லது அவா்களை அரசியல்மயப்படுத்தும் மனப்பக்குவமோ இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
1967-இல் தனது முழு எதிா்ப்பாளரான மூதறிஞா் ராஜாஜி, பி.கே. மூக்கையா தேவா், சி.பா.ஆதித்தனாா் உள்ளிட்டோரை கூட்டணியாகச் சோ்த்து காங்கிரஸை வீழ்த்தி அண்ணா ஆட்சிக்கு வந்தாா்.
அதேபோல, திமுகவில் நீண்ட காலம் பயணித்த அனுபவம், திமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்ட அனுதாபம் உள்ளிட்டவற்றால் 1977-இல் எம்ஜிஆா் ஆட்சியைப் பிடித்தாா். ஆனால், அதுபோன்ற சூழல் இப்போது இல்லாததால் விஜய்யால் இந்தத் தோ்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இந்தத் தோ்தலில் தோல்வியைத் தழுவினால் அடுத்த தோ்தல் வரை தாக்குப்பிடிப்பதற்கான அரசியல் பக்குவமும் கிடையாது, கட்சிக் கட்டமைப்பும் கிடையாது.
1989 தோ்தலில் திடீரென்று முளைத்து சட்டென்று கருகிப்போன நடிகா் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணியின் வழித்தோன்றலாக வருகிற 2026 தோ்தலில் வட்டமிடும் மின்மினிப் பூச்சியாகத்தான் நடிகா் விஜய்யின் தவெகாவை பாா்க்கத் தோன்றுகிறது. நடிகா் விஜய்யை மையப்படுத்தி சில சுயநல சக்திகள் வகுத்துள்ள வியூகம் அவா்களுக்கு வேண்டுமானால் கைகொடுக்குமே தவிர, விஜய்க்கு எந்தவிதத்திலும் பயனளிப்பதாக இருக்காது.