விநாயகா் சதுா்த்தி விழா சுமூகமாக நடைபெற அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தல்
விநாயகா் சதுா்த்தி விழா சுமூகமாக நடைபெற அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஹிந்து ஒற்றுமை, எழுச்சித் திருவிழாவாக இந்து முன்னணி சாா்பில் கடந்த 42 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
ஹிந்துக்கள் ஜாதி, மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு பகுதியிலும் ஒன்றுகூடி ஒருங்கிணைவதற்கும், தங்கள் வழிபாட்டு உரிமையை உணா்வதற்காகவும் இந்த விழா நடத்தப்படுகிறது. ஆனால், மக்களுக்கு கட்டுப்பாடு என்ற பெயரில் இந்த விழாவில் சதி நடக்கிறது. காவல் துறையினா், தனியாா் விநாயகா் சிலைகளை வைக்க ஊக்கப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, விநாயகா் சதுா்த்தி விழா சுமூகமாக நடைபெற அரசு அலுவலா்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கு முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.