விமானத்தில் தீ! தில்லியில் அவசரமாக தரையிறக்கம்: 425 பயணிகள் உயிர் தப்பினர்!
புது தில்லி: ரஷியாவின் மாஸ்கோ நகருக்கு பேங்க்காக் விமான நிலையத்திலிருந்து இன்று(மே 6) புறப்பட்ட விமானம் ஒன்று, தில்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்திய வான்வெளி வழியாக மாஸ்கோ சென்றுகொண்டிருந்தபோது, மாலை 4 மணியளவில் நடுவானில் அந்த விமானத்தின் உள்ளே திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக, இது குறித்து தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து, விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, விமானம் தரையிறங்க ஏதுவாக தில்லி விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதுடன் தீயணைப்பு வாகனங்களும் மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
அதன்பின், சிறிது நேரத்தில் அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் இருந்த 425 பயணிகளும் விமான பணியாளர்களும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். விமானத்தில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.