விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்
சென்னை விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குளிா்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் விமானப் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையும், விமான நிலையத்தில் இருந்து அக்கரை பகுதி வரையும் கடந்த ஏப்.25 முதல் 2 வழித்தடங்களில் மாநகா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது விமானப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், ஓஎம்ஆா் சாலையில் உள்ள சிறுசேரி தொழிற்பேட்டைக்கு, செவ்வாய்க்கிழமை முதல் புதிதாக எம்ஏஏ-2 எனும் குளிா்சாதன மின்சார பேருந்து சேவையை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.
இந்தப் பேருந்து தினசரி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பல்லாவரம் மேம்பாலம் வழியாக கீழ்க்கட்டளை சந்திப்பு ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, சோழிங்கநல்லூா், துரைப்பாக்கம், ஓஎம்ஆா் சாலையில் சோழிங்கநல்லூா் வழியாக சிறுசேரி தொழிற்பேட்டைக்கு இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக இந்தப் பேருந்து இதே வழித்தடத்தில் சென்று சென்னை விமானநிலையத்தை அடையும். இதன் வரவேற்பைப் பொறுத்து பிற வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.