விருதுநகர்: நகை, கைத்துப்பாக்கி பிடிபட்ட வழக்கு; போலீஸ்காரர் உட்பட இருவர் கைது!
விருதுநகர் மாவட்டம், வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பிடிபட்ட சம்பவத்தில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரை அடுத்த பூசாரிப்பட்டி பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த நபர் குறித்து கிராம மக்கள் போலீஸூக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் தான் ஓட்டிவந்த டூவீலரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு காட்டுப்பகுதிக்குள் தலைமறைவானார். இதையடுத்து அங்குவந்த வச்சக்காரப்பட்டி போலீஸார், டூவீலரை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அந்த வாகனம் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியிலிருந்து திருடப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து காட்டுப்பகுதிக்குள் தப்பியோடிய நபரை தேடிச்செல்கையில், அங்கு மதுபோதையில் இருந்த மற்றொரு நபரை பிடித்து போலீஸார் சோதனை செய்தனர். அவரிடம் 40 பவுன் நகை, கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருப்பதைக்கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை, தனியே ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள கூமாபட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி (வயது 33), தமிழ்நாடு காவல்துறையில் 2013-ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை காவலராக தற்போது பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
நகை, துப்பாக்கி தொடர்பாக தனுஷ்கோடியிடம் நடத்திய விசாரணையில், டாஸ்மாக்கில் தன்னுடன் அமர்ந்து மது அருந்திய நபரின் டூவீலர் தான் போலீஸார் பறிமுதல் செய்த அந்த வாகனம். அவரிடம், பணம் கொடுத்துத்தான் நகை வாங்கியதாக முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தனுஷ்கோடியை, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பான பிரிவில் கைது செய்த போலீஸார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, போலீஸ் தேடுதலில் தப்பியோடிய மர்மநபரை தனிப்படையினர் தேடி வந்தனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/gbwbca8i/IMG-20250211-WA0000.jpg)
இதற்கிடையே கைதுசெய்யப்பட்ட தனுஷ்கோடியின் செல்போன் எண்ணை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் அடிப்படையில் சந்தேக எண் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் தப்பியோடிய மர்மநபர், திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படையினர், பதுங்கியிருந்த நபரை சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்துகையில் கைது செய்யப்பட்டவர், சுரேஷ் என்ற குட்டி (வயது 26) எனத் தெரியவந்தது.
போலீஸ் வருவதை அறிந்து காட்டுப்பகுதிக்குள் பதுங்கியவர் கால்நடையாகவே எத்திலப்பன்பட்டி கிராமத்திற்கு வந்து, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த டூவீலரை திருடிக்கொண்டு பழனிக்கு தப்பிச்சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம், நகை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கு முறையான பதில் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்" என்றனர்.