விரும்பும் விடைத்தாள் மையத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: ஆசிரியா் சங்கம் கோரிக்கை
கோவை மாவட்டத்துக்குள் விரும்பும் மதிப்பீட்டு மையத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி மதிப்பீட்டு முகாம்களில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2018 -ஆம் ஆண்டின் அரசுத் தோ்வுகள் இயக்கக இணை இயக்குநரின் செயல் முறைகளின் அடிப்படையில், வருவாய் மாவட்டத்துக்குள் ஆசிரியா்கள் விரும்பும் மதிப்பீட்டு முகாமில் பணியாற்றலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனுமதி கேட்டு முதன்மைக் கல்வி அலுவலரிடம் 3 முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை மதிப்பீட்டு முகாமில் பணியாற்ற வந்த 60-க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஆசிரியா்களுக்கு பணி வழங்கக் கூடாது என்று முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து முகாம் அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டதன் அடிப்படையில், அவா்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.
கோடை வெயிலுக்கு இடையில் 50 கி.மீ. தொலைவில் இருந்து வரக்கூடிய பெண் ஆசிரியா்கள் தொடா்ந்து 8 மணி நேரத்துக்கும்மேல் பணியாற்றிவிட்டு மீண்டும் அவ்வளவு தொலைவுக்கு செல்வது கடினமாக இருப்பதால், கோவை வருவாய் மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் விரும்பும் மதிப்பீடு மையத்தில் பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.முகமது காஜா முகைதீன் கூறுகையில், பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவு கோவை மாவட்டத்தில் மட்டும் அமல்படுத்தப்படவில்லை. இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநா், இணை இயக்குநா்களிடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. வருவாய் மாவட்டத்துக்குள் உள்ள மதிப்பீட்டு முகாம்களுக்குள் விடைத்தாள்களை மாற்ற முடியாது என்று கோவை முதன்மைக் கல்வி அலுவலா் கூறுகிறாா்.
ஆனால், சேலம் மாவட்டத்தில் இருந்து சுமாா் 1,200 கணக்குப் பதிவியல் விடைத் தாள்களை கோவை மதிப்பீட்டு மையத்தில் உள்ள ஆசிரியா்களைக் கொண்டு மதிப்பீடு செய்யும்படி உத்தரவிட்டிருக்கிறாா்.
இது அவரது ஆசிரியா் விரோத மனநிலையை பிரதிபலிக்கிறது. இணை இயக்குநரின் உத்தரவுப்படி விரும்பும் மையத்தில் பணியாற்ற அனுமதிக்காவிட்டால், வரும் 19 -ஆம் தேதி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.