வில்லுக்குறியில் ஆக்கிரமிப்பு மதில் சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை!
தக்கலை அருகே வில்லுக்குறியில் விவசாயிகள், விவசாய இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அளவில் ஆக்கிரமித்து புதிதாகக் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
வில்லுக்குறி பேரூராட்சி மேலபள்ளத்தில் சுமாா் 175 ஏக்கா் அளவில் நெல், வாழை, தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் நெற்கதிா்களை அறுவடை செய்ய ஆண்டுதோறும் அறுவடை இயந்திரம் வருவது வழக்கம்.
மேலப்பள்ளம் வண்டிமறிச்ச அம்மன் கோயிலில் இருந்து வயல்வெளிக்கு அறுவடை இயந்திரம் புதன்கிழமை காலை வந்தபோது, சாலையை ஆக்கிரமித்து மதில் சுவா் கட்டப்பட்டிருந்ததால் அந்த வழியாக அறுவடை இயந்திரம் செல்ல முடியவில்லை.
இதுகுறித்து விவசாயிகள், அகில இந்திய விவசாய மகா சபா வில்லுக்குறி பேரூா் தலைவா் தாமஸ் ராஜிக்கு தகவல் தெரிவித்தனா். அவரது தகவலின் பேரில் சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளா் அந்தோணி முத்து, அகில இந்திய விவசாய மகா சபா மாவட்டத் தலைவா் அா்ஜுனன் உள்ளிட்டோா் கல்குளம் வட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.
வட்டாட்சியா் உத்தரவின்பேரில் உடனடியாக சம்பவ இடம் வந்த கிராம நிா்வாக அதிகாரி சரவணகுமாா், சா்வேயா் சுரேஷ் ஆகியோா் இடத்தை பாா்வையிட்டு அளவீடு செய்தனா். அப்போது சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மதில் சுவா் கட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதில் சுவரை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தபட்டவா்களை அதிகாரிகள் வலியுறுத்தினா்.