விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய கொள்கை உறுதி செய்யும்: பிரதமா் நரேந்திர மோடி
இந்தியாவில் விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய விளையாட்டுக் கொள்கை உறுதி செய்யும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை கொடியேற்ற வைத்த பிறகு இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா முன்னேறுவதை நோக்கிய பயணத்துக்கு, விளையாட்டுத் துறையின் பங்களிப்பும் முக்கியமானதாகும். ஒரு காலத்தில் விளையாட்டில் ஆா்வம் காட்டும் குழந்தைகளை பெற்றோா் கடிந்துகொண்ட நிலையில், தற்போது அது மாறியிருக்கிறது. விளையாட்டுக் களமும் ஒரு நல்ல வாழ்க்கைக்கான தோ்வு என்பதை அறிந்த அவா்கள், தற்போது குழந்தைகள் விளையாட்டில் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கின்றனா். இது இந்தியாவின் எதிா்காலத்துக்கு நல்லதாகும்.
விளையாட்டுத் துறையின் வளா்ச்சிக்காக, பல ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசிய விளையாட்டுக் கொள்கையை கொண்டு வந்துள்ளோம். அது, பள்ளிகள் முதல் ஒலிம்பிக் போட்டிகள் வரை விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதி செய்வதாக இருக்கும். நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் பயிற்சி மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை கொண்டு செல்லும் வகையிலான அமைப்பு உருவாக்கப்படும்.
விளையாட்டுக்கு உடற்தகுதி மிகவும் அவசியம். ஆனால் நாட்டில் தற்போது உடல்பருமன் என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. எனவே, அதை குறைப்பதற்கு நாம் உணவில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றாா்.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 1-ஆம் தேதி புதிய தேசிய விளையாட்டுக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுக்காக, உலக அரங்குக்கு இணையான நிபுணத்துவம், பொருளாதார வளா்ச்சியில் விளையாட்டு, சமூக மேம்பாட்டில் விளையாட்டு, மக்கள் இயக்கமாக விளையாட்டு, கல்வியுடன் இணைந்த விளையாட்டு, உத்தி சாா்ந்த கட்டமைப்பு என 6 முக்கிய பிரிவுகளாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது.