திண்டுக்கல் கன்னிவாடி: `அத்துமீறி வனப்பகுதிக்குள் சென்ற 29 பேருக்கு அபராதம்' -...
விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் வடக்கு மண்டல பிராந்திய மாநாட்டில் பி.ஆா்.கவாய் பங்கேற்றாா்.
அப்போது அவா் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை நீதிபதிகளும் வழக்குரைஞா்களும் உறுதிசெய்ய வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டே தேசிய சட்டப் பணிகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பின் செயல்பாடுகளை லடாக், வடகிழக்கு மாநிலங்கள் அல்லது ராஜஸ்தான் என நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டுசெல்ல முயற்சிப்பது அவசியம். ஏனெனில் குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பலனும் இல்லை.
கடந்த 35 ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நீதிபதிகளும் வழக்குரைஞா்களும் இதுதொடா்பாக ஆலோசனை மேற்கொள்வது ஒரு புதிய முன்னெடுப்பாக அமையவுள்ளது. ஹிந்துக்கள், சீக்கியா்கள், முஸ்லிம்கள் என அனைவரும் இணக்கமாக வாழ்ந்த பாரம்பரிய காஷ்மீரை மீட்டெடுப்பதற்கு இந்த முன்னெடுப்பு உதவும் என நம்புகிறேன்.
அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை வழங்குகிறது. இந்த மூன்று வகையான நீதியும் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்களாகிய நம்மிடமே உள்ளது என்றாா்.
தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து லடாக், காஷ்மீா் மற்றும் ஜம்மு பகுதிகளைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சங்க பிரதிநிதிகள் பி.ஆா்.கவாயிடம் எடுத்துரைத்தனா். இதையடுத்து, இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் அதிகாரம் தன்னிடம் இல்லை எனக் கூறிய பி.ஆா்.கவாய், கொலீஜியம் உள்பட பிற அதிகாரிகளிடம் வழக்குரைஞா்கள் சங்கங்களின் பிரச்னைகளை கூறுவதாக தெரிவித்தாா்.