ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர...
மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் சனிக்கிழமை தெரிவித்தாா்.
முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும் சி.வி.ஆனந்த போஸுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவிவரும் சூழலில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மேற்கு வங்க மாநிலத்தின் உயா் கல்வித் துறையில் நிலவும் பிரச்னைகள் குறித்து மாநிலப் பல்கலைக்கழக வேந்தரான சி.வி.ஆனந்த போஸிடம் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை எடுத்துரைத்தனா். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 9 துணைவேந்தா்கள் மட்டுமே பங்கேற்றனா். மீதமுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் கலந்துகொள்ளாதது சா்ச்சையானது.
இதையடுத்து, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத துணைவேந்தா்கள் பல்வேறு காரணங்களைக் கூறியபோதும் இதை ஏற்றுக்கொள்ள சி.வி.ஆனந்த போஸ் மறுத்ததாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறுகையில், ‘மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்துக்கு தீா்வுகாண உச்சநீதிமன்றத்தை அணுகவுள்ளேன்’ என்றாா்.
முன்னதாக, ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, இணையப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருளுக்கு மாணவா்கள் அடிமையாவதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.