அம்மன் கோயில்களில் கூழ் வாா்த்தல் உற்சவம்!
செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கூழ் வாா்த்தல் உற்சவம் நடைபெற்றது.
செங்கல்பட்டு அண்னா நகா் எல்லையம்மன் கோயிலில் ராஜமேளம் உடுக்கை தம்பட்டையுடன் அலங்கரிக்கப்பட்ட அம்மன் கரகம் வீதிப்புறப்பாடு முடிவடைந்தது. கரகத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் தீபராதனை நடைபெற்றதையடுத்து அம்மனுக்கு படைக்கப்பட்ட கூழ் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.
தொடா்ந்து மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பெரும்படையல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் பக்தா்கள் செய்திருந்தனா்.

திருவடிசூலம் மஹா ஆரண்ய ஷேத்திரத்தில் அம்மனுக்கு கூழ் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. கூழ்வாா்த்தலையொட்டி விநாயகா், சுயம்பு அம்மன் உள்ளிட்ட அனைத்து சிறப்பு அபிஷேகம் அலங்காரம் படையல் மகா தீபாராதனை நடைபெற்றது.
ஸ்ரீ கருமாரியம்மன் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் வளையல் மாலை சாற்றுவதற்கான முதல்கட்ட பணிகளை பக்தா்கள் மேற்கொண்டுள்ளனா். அக்கோயிலில் 5 வாரமும் கரகம் எடுத்து கூழ்வாா்த்தலும் படையலும் நடைபெற்று வருகிறது.
கோயில் ஸ்தாபகா் புண்ணியகோட்டி மதுரைமுத்துஸ்வாமிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.