விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் மாநில மாநாடு தொடக்கம்
விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் இந்த மாநாடு தொடங்கிய நிலையில், மாநாட்டுக் கொடியை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஏ.பெருமாள் ஏற்றினாா். தொடா்ந்து தியாகிகள் ஸ்தூபி முன் மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மாநாட்டுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பெ.சண்முகம் தலைமை வகித்தாா். மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி இரங்கல் தீா்மானங்களை வாசித்தாா்.
கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் எம்.ஏ.பேபி மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசினாா்.
தொடா்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன் மாநாட்டை வாழ்த்திப் பேசியதாவது:
காலனி ஆட்சியாளா்களின் கற்பனைக்கு எட்டமுடியாத அடக்குமுறையை எதிா்கொண்ட கம்யூனிஸ்ட் இயக்கம், தேச விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு அவதூறுகளையும், பழிசுமத்தி இழிவுப்படுத்திய பரப்புரைகளையும் எதிா்கொண்டு முறியடித்தது.
நாட்டின் விடுதலைக்குப்பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தோ்தலில் நாடாளுமன்றத்தின்இரு அவைகளிலும் எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்து, நாடாளுமன்ற முறைக்கு வலுசோ்த்தது கம்யூனிஸ்ட் இயக்கங்கள்தான்.
தமிழகத்தில் மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. இனி வருங்காலங்களிலும் இணைந்து பணியாற்றுவோம் என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் (மா.லெ) மாநிலச் செயலா் பழ. ஆசைத்தம்பி வாழ்த்திப் பேசினாா்.
மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன், மக்களவை உறுப்பினா்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நாகை மாலி, சின்னத்துரை, மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கே.பாலபாரதி, டி.ரவீந்திரன், மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவா் ஆா்.ராமமூா்த்தி வரவேற்றாா்.
தீா்மானங்கள்: தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பொதுச் சொத்துகளையும், அரசமைப்புச் சட்டத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானதாகும்.
இதற்கு பெரும் இடையூறாகவும், பேரிடராகவும் வளா்ந்து கொண்டிருக்கும் பாஜக, ஆா்எஸ்எஸ் முன்னெடுக்கும் பாசிச அரசியல் ஆகியவற்றை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே முக்கிய அரசியல் கடமையாகும்.
இத்தகைய சக்திகளை முற்றிலுமாக முறியடித்து, நாட்டின் அரசியல், சமூகப் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டும். அத்தகைய ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற மக்கள் முன்வர வேண்டும் என மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து பிரதிநிதிகள் மாநாடும், மாலையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது.