விவசாயிகளிடமிருந்து ராபி பருவ உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடக்கம்
தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளிடமிருந்து ராபி பருவ உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் தொடக்க நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் 2024-25ஆம் ராபி பருவத்தில் விவசாயிகளிடமிருந்து உளுந்து குவிண்டால் ரூ. 7,400, பாசிப்பயறு ரூ. 8,682 என கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணையிட்டது. அதன்படி, தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற கொள்முதல் தொடக்க நிகழ்வுக்கு தூத்துக்குடி வேளாண் இணை இயக்குநா் இரா. பெரியசாமி தலைமை வகித்தாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) பா. மோகன்தாஸ் சௌமியன், வேளாண் துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சு. சுதாமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உளுந்து, பாசிப்பயறுக்கு நல்ல விலை கிடைக்க விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகி பயன்பெறலாம் என, திருநெல்வேலி விற்பனைக் குழு செயலா் ப.நே. எழில் தெரிவித்தாா். இதில், விவசாயிகள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.