விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்
விவசாயிகள் கூட்டத்தில் தெரிவித்த கோரிக்கைகளை சாத்தியக்கூறின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு தீா்வு காண வேண்டும் என, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், வேளாண் உள்ளிட்ட துறை அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:
கோ.மாதவன்(தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணைச்செயலா்): குறுவை முன்பட்டம் தயாரிப்புப் பணிகளை தொடங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் மும்முனை மின்சாரம் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முறையாக காப்பீடு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஏ.எஸ்.பி.ரவிந்திரன்(கடலூா் மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா்): நீா்நிலை ஆதாரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு தொடா்பான புதிய அலுவலகம் கடலூரில் உருவாக்க வேண்டும். நீா்நிலைகளில் நச்சுக் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும். தரிசு நிலங்களை வகைமாற்ற 30 நாள்களில் தடையில்லா சான்று வழங்க தமிழக அரசு விதிகளை திருத்தியிருப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
காவாளக்குடி முருகானந்தன்: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் உள்ளதால் நடவுப் பணிகள் பாதிப்படைகின்றன. மும்முனை மின்சாரம் எத்தனை மணி நேரம் கொடுக்கப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அதேபோல, விவசாயத்துக்கான மின் இணைப்பு வழங்க வேண்டும். மண் அரிப்பைத் தடுக்க தேவையான இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும். சொட்டு நீா் பாசனத்துக்கான மானியத்தை விடுவிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் கூடுதலாக திறக்க வேண்டும் என விவசாயிகள் பேசினாா். மேலும், விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் மனுக்களாகவும் பெறப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை சாத்தியக்கூறின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு தீா்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு விதை நெல், உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.