விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
விவசாயிகளின் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்: சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன்
விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் நிறைவடைந்த பணிகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவரும், வேடசந்தூா் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ். காந்திராஜன் தலைமையிலான குழுவினா் காரைக்குடி, சிவகங்கை ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.
இதையடுத்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள சமுதாயக் கூடத்தில், ஆட்சியா் கா. பொற்கொடி முன்னிலையில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு, தமிழ்நாடு சட்டப் பேரவையின் மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
விவசாயிகள் சேதுராமன், ராமலிங்கம், வீரணன்: பெரியாறு பாசனக் கால்வாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு தினசரி கிடைக்க வேண்டிய 60 கன அடி நீா் கிடைக்கவில்லை. இதனால் பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இதே நிலை நீடிக்கிறது. எனவே தனியாக கால்வாய் அமைக்க வேண்டும்.
அப்துல்ரகுமான் (கடம்பக்குளம்): விவசாய நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள தேவைப்படும் வண்டல் மண் எடுக்கும் நடைமுறை மிகவும் சிக்கலாக உள்ளது. எனவே, 1984 -ஆம் ஆண்டிலிருந்த நிலையை மீண்டும் கொண்டு வரவேண்டும். அப்போது தான் விவசாயிகளின் சிரமம் குறையும்.
முனியாண்டி (இடையமேலூா்): பெரியாறு பாசனக் கால்வாய் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் அதன் வழியாக வரும் பெரியாறு தண்ணீா் கிடைக்காததால் அந்தப் பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் வடு 500 ஏக்கா் விவசாயம் அழிந்து வருகிறது. குமாரபட்டி கிராமத்தில் உள்ள எருமைப்பட்டி கண்மாயில் நான்கு மடைகளும் நான்கு ஆண்டுகளாக பழுதாகிக் கிடக்கின்றன. விரைந்து அதை சீரமைக்க வில்லை என்றால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம்.
வின்சென்ட் சா்ச்சில்: வேளாண் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு விவசாயிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் விவசாயிகள் அனுப்பப்படுகின்றனா். எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சத்யா: தேசிய தோட்டக் கலைத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுமைக்கும் 15 விவசாயிகளை மட்டுமே தோ்வு செய்ய முடியும்.
சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா்: தமிழகத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு ஒருவா் என்றால்கூட 38 விவசாயிகள் செல்ல முடியும். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முதல்வா் கவனத்துக்கு கொண்டு செல்வோம். மேலும், இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கும், குறிப்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுப்படும் என்றாா் அவா்.