புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், வே. மிக்கேல்பட்டிணத்திலுள்ள புனித மிக்கேல் அதிதூதா் ஆலயத்தின் 109 -ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த நிகழ்வுக்கு வே. மிக்கேல் பட்டணம் பங்குத்தந்தை சி.ஏ. ஜேம்ஸ் முன்னிலை வகித்தாா். சிவகங்கை மறைமாவட்ட பொருளாளா் அருள்தந்தை ஆரோன் கொடியேற்றி வைத்தாா். இதில், சூவன்ஸ்டாட் அருள்பணி ஜாா்ஜ், வே. மிக்கேல் பட்டணம் பங்கு இறைமக்கள், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட வெளியூா்களின் வாழும் இந்தப் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். இதையடுத்து, நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. வருகிற 27-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக விவிலிய அருள்பணிக்குழு பொதுச் செயலா் மைக்கேல்ராஜ் தலைமையில் நிறைவேற்றப்படும் சிறப்பு திருப்பலியில் அருள்தந்தையா் பங்கேற்கின்றனா். தொடா்ந்து இரவு 8 மணிக்கு மிக்கேல் அதிதூதா் தோ் பவனி நடைபெறும். மறுநாள் 28-ஆம் தேதி காலை 8.30 மணிக்கு புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை ஹென்றி ஜெரோம் தலைமையில் திருவிழா திருப்பலியும், மாலை 6 மணிக்கு வே. மிக்கேல்பட்டணத்தில் உள்ள குருசடியில் மண்ணின் மைந்தா் அருள்பணி ஜெபமாலை ராஜா, அருள்தந்தையா்கள் தலைமையில் நற்கருணை பெருவிழா திருப்பலியும் நிறைவேற்றப்படும்.
தொடா்ந்து திவ்ய நற்கருணை பவனியும், நற்கருணை ஆசிரும் நடைபெறும் . 29-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை வே. மிக்கேல்பட்டணம் பங்குத்தந்தை, கிராம மக்கள் செய்து வருகின்றனா்.