விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் வலியுறுத்துமாறு பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தலேவாலிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டது.
விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் உள்ள கனௌரி போராட்டக் களத்தில் ஜக்ஜித் சிங் தலேவால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த நவ. 26-ஆம் தேதி தொடங்குவதாக அறிவித்திருந்தாா்.
போராட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்னதாக, போராட்டக் களத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஜக்ஜித் சிங் தலேவால், லூதியாணாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 29) மாலை அவா் விடுவிக்கப்பட்டாா்.
இதற்கிடையே, பஞ்சாப் காவல் துறையால் தான் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஜக்ஜித் சிங் தலேவால், சனிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.
ஜக்ஜித் சிங் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் அமா்வு, ‘ஜனநாயக நாட்டில் யாரும் அமைதியான போராட்டத்தில் ஈடுபடலாம். ஆனால், அது மக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. கனௌரி எல்லை பஞ்சாப் மாநிலத்துக்கு உயிா்நாடி போன்றது என அனைவருக்கும் தெரியும்.
போராட்டம் குறித்து நாங்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், சட்டத்துக்கு கட்டுப்பட்டு மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதற்கு சக விவசாயிகளை ஜக்ஜித் சிங் தலேவால் வலியுறுத்த முடியும். இச்சூழலில், அவரது மனுவை ஏற்றுக்கொள்ளமுடியாது’ என்று மனுவை தள்ளுபடி செய்தனா்.
வேளாண் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகா் தில்லியை முற்றுகையிட ஏராளமான விவசாய அமைப்புகள் வந்தன.
தில்லிக்குள் நுழையவிடாமல் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் கடந்த பிப்.13-ஆம் தேதி முதல் விவசாயிகள் முகாமிட்டுள்ளனா்.