விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள்
வெள்ளக்கோவில், முத்தூா் வட்டார விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள் வழங்கப்படுவதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெள்ளக்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் ஜி.சரஸ்வதி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வெள்ளக்கோவில் வேளாண்மை விரிவாக்க மையம், முத்தூா் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விதை, உயிா் உரம், நுண்ணூட்டம் போன்ற இடுபொருள்கள் விநியோகிக்கப்படுகிறது.
தற்போதைய சம்பா பருவத்துக்கு ஏற்ற ஐ.ஆா்.20 ரக நெல் விதைகள், கோ.32 சோளம், வம்பன். 8 உளுந்து விதைகள் ஆகியவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. மேலும் சிவன் சம்பா, தூய மல்லி பாரம்பரிய நெல் ரக விதைகளும் இருப்பு உள்ளன.
இவற்றுடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, ஜிங்க் பாக்டீரியா திரவ உயிா் உரங்கள், நுண்ணூட்டங்கள், சிறு தானியங்கள், பயறு வகைகளும் கிடைக்கின்றன.
தற்போது பருவமழை தொடங்கி உள்ளதால் மேற்கொண்ட இடு பொருள்களை விவசாயிகள் மானிய விலையில் பெற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.