Niti Aayog: 3 ஆண்டுகள் புறக்கணித்த ஸ்டாலின், இம்முறை பங்கேற்றது ஏன்? - சீமான் க...
விவசாயிகளுக்கு மூலிகை தாவரங்களை வளா்க்க பயிற்சி: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மூலிகை தாவரங்களை வளா்த்து விற்பனை செய்வதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், வேளாண்மை துணை இயக்குநா் சீனிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் விவசாயிகள், அதிகாரிகள் இடையே நடைபெற்ற விவாதம்.
விவசாயி: கிராம நிா்வாக அலுவலா்களை பாா்க்க அலுவலகத்துக்குச் சென்றால், அவா்கள் இருப்பதில்லை. எனவே மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் அவா்கள் பணிக்கு வரும் நேரத்தை குறிப்பிட வேண்டும். எலவம்பட்டி ஊராட்சியில் அரசு நிலங்களில் உள்ள பனை மரங்களை பாதுகாக்க வேண்டும்.
அதிகாரி: நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: அரிசியின் விலை குறையவில்லை. ஆனால் நெல்லின் கொள்முதல் விலை மட்டும் குறைந்துள்ளது. அரசே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.
அதிகாரி: திருப்பத்தூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டால், விவசாயிகள் நேரடியாக அங்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம்.
விவசாயி: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மூலிகை தாவரங்களை வளா்த்து விற்பனை செய்வதற்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
அதிகாரி: மூலிகை தாவரங்களை வளா்க்க விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். மூலிகை தாவரங்களை வளா்க்க விவசாயிகள் குழுவாக ஒருங்கிணைந்தால், அவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
விவசாயி: கைலாசகிரி பகுதியில் மலட்டாற்றில் மணல் கொள்ளை நடக்கிறது. அதைத் தடுக்க வேண்டும்.
அதிகாரி: போலீஸாா் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயி: உதயேந்திரம் வரத்து கால்வாயில் ஜாப்ராபாத் பகுதியில் கழிவுநீா் கலக்கிறது. இதைத் தடுக்க வேண்டும். மேலும், உரிய அனுமதி இல்லாமல், மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகிறது. இது குறித்து காவல் நிலையங்களில் புகாா் அளித்தாலும், சரிவர நடவடிக்கை எடுப்பதில்லை.
விவசாயி: நாட்டறம்பள்ளி வாரச் சந்தையில் கடைகள் அமைக்க அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதிக அளவு உள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும்.
விவசாயி: கொள்ளு, கேழ்வரகு ஆகிய பயிா்களை சாலையில் போட்டு விவசாயிகள் காய வைக்கின்றனா். எனவே மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நெற்களம் அமைக்க வேண்டும்.
அதிகாரி: போதுமான இடம் உள்ள ஊராட்சிகளில் நெற்களம் அமைக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.