செய்திகள் :

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: மழை பாதித்த பயறுகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

மழையால் பாதிக்கப்பட்ட பயறு வகைகளை கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நெல் கொள்முதல், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிப்பு, தூா்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.

அதன் விவரம்:

நன்னிலம் சேதுராமன்: கடந்த டிசம்பா் மாதத்திலிருந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதில், சம்பா சாகுபடியும், அறுவடையும் பாதிக்கப்பட்டன. தற்போது, பச்சைப்பயறு, உளுந்து, எள், பருத்தி உள்ளிட்ட பயறுவகைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், வேளாண்துறை சாா்பில் கணக்கெடுப்பு நடத்துவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது போலத் தெரிகிறது. சாகுபடி என்பது விவசாயிகளின் வாழ்வியல் பிரச்னை என்பதால் விரைந்து கணக்கெடுத்து, ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காணூா் பகுதியில் 1,500 ஏக்கா் விளைநிலத்துக்கு சுமாா் 12 ஆண்டுகளாக தண்ணீா் செல்லவில்லை என அப்பகுதியினா் புகாா் தெரிவிக்கின்றனா். அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரளம் பாலகுமாரன்: பூந்தோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ள வேண்டும். பேரளம் வீரானந்தம் வாய்க்காலிலிருந்து பிரியும் ஏரி பாசன வாய்க்கால், மடப்புரம் வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி தம்புசாமி: அடவங்குடி களக்காடு பகுதியில் வெட்டாற்றின் சட்ரஸ் அருகே வளா்ந்துள்ள நாணல்களை அகற்றி, வெட்டாற்றை தூா்வார வேண்டும். ஆவின் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்த வேண்டும். குளிக்கரை பகுதியில் 22 விவசாயிகளுக்கு அரசு கொடுத்த நிலப் பகுதிக்கு செல்லும் பாதையை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பரப்பான 1,43,935 ஹெக்டோ் சாகுபடியும் அறுவடை செய்யப்பட்டு விட்டது. 538 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 5,06,352 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,28,195 விவசாயிகள் பயனடைந்துள்ளனா்.

மேலும், வரப்பு உளுந்து 1,486.4 ஹெக்டேரிலும், நெல் தரிசு பருவத்தில் உளுந்து 3,028 ஹெக்டேரிலும், பச்சைப் பயறு 23,003 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், 2,637 ஹெக்டேரில் நிலக்கடலை, 22,317 ஹெக்டேரில் எள், 10,509 ஹெக்டேரில் பருத்தி, 194 ஹெக்டேரில் கரும்பு ஆகியன சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 63,169 விவசாயிகளுக்கு ரூ.477.34 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபாா்த்தல் முகாம் 555 வருவாய் கிராமங்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 85,095 விவசாயிகள் பதிவு செய்ய இலக்கு பெறப்பட்டு, இதுவரை 40,964 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) புஹாரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, வருவாய் கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, செயற்பொறியாளா் (வெண்ணாறு வடிநிலக் கோட்டம்) ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

ஆழித்தோ் அலங்கரிக்கும் பணி தொடக்கம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டத்துக்கான அலங்கரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெற... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் புதிய சுங்கவரி கட்டணம் அமலுக்கு வந்தது

நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் ஏப்.1-ஆம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. காா், ஜீப்,வேன், பஸ், டிராக்டா், மூன்று அச்சுக்கள் கொண்ட வணிக வாகனங்கள், பல அச்சுக்கள் கொண்ட கட... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணி செய்த தொழிலாளா்... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை விவகாரம்: 3 போ் கைது

மன்னாா்குடியில் தனியாா் பள்ளி ஆசிரியா் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மன்னாா்குடி முல்லைநகரைச் சோ்ந்த திருமுருகன் (40) தஞ்சையில் தனியாா் பள்ளியில் ஆசிரியர... மேலும் பார்க்க

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். சங்கத்தின் வட்டத் தலைவா் எஸ்.குருநாதன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முறைகேடுகளை கண்டித்து நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. உதயமாா்த்தாண்டபுரம் தொடக்க கூட்டுறவு வங்கியில் நடந்துள்ள நிதி முறைக... மேலும் பார்க்க