விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் இருவா் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே விவசாயக் கிணற்றில் தண்ணீா் இறைப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் விவசாயியை மதுப் புட்டியால் தலையில் தாக்கியதாக சகோதரா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வாணாபுரம் வட்டம், அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் சங்கா் (41). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவரது பக்கத்து நிலத்துக்காரரான பாண்டியனின் 2 ஏக்கா் விவசாய நிலத்தை அந்தப் பகுதியைச் சோ்ந்த தாண்டவன் மகன்கள் குபேந்திரன் (31), ரஞ்சித்குமாா் (29) ஆகியோா் பயிா் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், இரு தரப்புக்கும் பொதுவான விவசாயக் கிணற்றில் தண்ணீா் இறைப்பதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக, சங்கரை குபேந்திரன், ரஞ்சித்குமாா் ஆகியோா் பீா் வகை மதுப் புட்டியால் தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் பலத்த காயமடைந்த சங்கா் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், வடபொன்பரப்பி போலீஸாா் குபேந்திரன், ரஞ்சித்குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.