விவசாயி வெட்டிக் கொலை
சோளிங்கா் அருகே நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற விவசாயி மா்ம நபா்களால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டாா்.
சோளிங்கரை அடுத்த ரெண்டாடியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (51). ரெண்டாடியில் உள்ள தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்த சீனிவாசன், அங்கேயே கோழிப்பண்ணை வைத்திருந்தாா். இவா் மீது சோளிங்கா் காவல் நிலையத்தில் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் மற்றும் காவல் துறையினரை தாக்கியதாக பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், திருவள்ளூா் மாவட்டத்தில் அடிதடி வழக்குகள் உள்ளதாகவும் சோளிங்கா் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியாக இவா் பெயா் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை சீனிவாசன், தனது நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக வீட்டில் இருந்து நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு வயல் ஓரம் மறைந்திருந்த மா்ம நபா்கள் அவரை திடீரென அரிவாளால் வெட்டியுள்ளனா். இதையடுத்து, அவா் ஓடிய நிலையில், தொடா்ந்து அவரை விடாமல் விரட்டி வெட்டியுள்ளனா். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த சோளிங்கா் போலீஸாா், சீனிவாசனின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சம்பவ இடத்தை அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா்சித்திக் நேரில் பாா்வையிட்டு அப்பகுதியில் விசாரணை நடத்தினாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்தக் கொலை சம்பந்தமாக தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.