விஷ்ணு தீபம்: வைணவக் கோயில்களில் வழிபாடு
விஷ்ணு தீபத்தை முன்னிட்டு தருமபுரியில் உள்ள வைணவக் கோயில்களில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை தீபத் திருவிழாவின் 2-ஆவது நாளையொட்டி விஷ்ணு தீப விழா அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெற்றது. தருமபுரி நகரில் உள்ள கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கோயில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தருமபுரி, குமாரசாமிப்பேட்டை, சிவசுப்ரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் கோயில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சந்திரப் பிரபை வாகனத்தில் சென்னகேசவ பெருமாள் எழுந்தருளினாா்.
கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில், வரதகுப்பம் ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோயில், அதகப்பாடி லட்சுமி நாராயணசுவாமி கோயில், மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோயில், அக்கமனஅள்ளி ஸ்ரீ ஆதிமூல வெங்கட்ராமணசுவாமி கோயில், செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோயில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து வைணவ கோயில்களிலும் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.