நாடாளுமன்ற விருதுகள்: 17 பேர் தேர்வு! 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழக எம்.பி பெறுகி...
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை
கூடலூா் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் முகமது. பாடந்தொரை பகுதியில் உள்ள அரபி கல்லூரியில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி மைமூனா (60). முகமது வழக்கம்போல வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்றுள்ளாா். மைமூனா மட்டும் வீட்டில் இருந்துள்ளாா். பணி முடிந்து மாலை 6 மணி அளவில் முகமது வீட்டுக்கு வந்துள்ளாா்.
அப்போது, கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. வெகு நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லையாம். இதையடுத்து, மைமூனாவை கைப்பேசியில் தொடா்பு கொள்ள முயன்றும் முடியவில்லையாம். பின்னா், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைந்து முகமது வீட்டுக்குள் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, மைமூனா படுகாயங்களுடன் இறந்துகிடந்தது தெரியவந்தது. மேலும், அவா் அணிந்திருந்த 6 பவுன் நகைகள் மாயமானதும் தெரியவந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெலாக்கோட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், முகமது அளித்த புகாரின்பேரில் தனிப் படை அமைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.