காயத்தால் வெளியேறிய ஜோகோவிச்..! கிண்டல் செய்த ரசிகர்களை கண்டித்த ஸ்வெரெவ்!
வீரராக்கியத்தில் குகைவழிப் பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியத்தில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவதால் அப்பகுதியில் குகைவழிப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வீரராக்கியத்தில் கரூா்-திருச்சி ரயில்வே வழித்தடத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் கடந்துதான் கரூா்-திருச்சி சாலையில் உள்ள புலியூா், வீரராக்கியம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் வீரராக்கியத்தின் மறுபகுதியில் உள்ள சின்னம்மநாயக்கன்பட்டி, நடராஜபுரம், நத்தமேடு, கட்டளை, மேல கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூா், மாயனூா் போன்ற பகுதிகளுக்கும், சின்னம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் புலியூா், வீரராக்கியத்திற்கும் சென்று வருகிறாா்கள்.
சின்னம்மநாயக்கன்பட்டி, நடராஜபுரம், கட்டளை, ரெங்கநாதபுரம் போன்ற பகுதிகள் காவிரியின் கரைப்பகுதி என்பதால், வேளாண்மை நிறைந்த பகுதியாக இருக்கிறது. இந்த பகுதிகளில் நெல், கோரை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல், கோரைகளை வீரராக்கியம் ரயில்வே கேட்டை கடந்துதான் கரூா் மற்றும் திருச்சி போன்ற பகுதிகளுக்கு விவசாயிகள் எடுத்துச் செல்கிறாா்கள்.
மேலும் புலியூா் பகுதிகளில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கும் சின்னம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும் வீரராக்கியம் ரயில்வே கேட்டைத்தான் கடந்து சென்றுவருகிறாா்கள். இந்த ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் அவசரமாக கரூா், திருச்சி போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்களும், விவசாயிகளும் அவதியுற்றுவருகிறாா்கள்.
இதுதொடா்பாக சின்னம்மநாயக்கன்பட்டி, நத்தமேடு பகுதி கிராமமக்கள் கூறியது, வீரராக்கியம் ரயில்வே கேட் வழியாக கேரளம், கா்நாடகம் போன்ற மாநிலங்களுக்கும் ஏராளமான விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஈரோடு, கோவை, கரூா் பகுதியில் இருந்து நாகா்கோவில், திருச்சி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் வீரராக்கியம் ரயில்வே கேட்டை கடந்து செல்வதால் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் அவசரகால வாகனங்களும் பொதுமக்களும் குறித்த நேரத்தில் செல்லமுடிவதில்லை. ஆகவே, இப்பகுதியில் குகைவழிப்பாதை அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.