Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
வீராணம், பெருமாள் ஏரிகள் தூா்வாரியதில் பல கோடி ரூபாய் முறைகேடு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு
கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம், பெருமாள் ஏரிகளை தூா்வாரியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் குற்றஞ்சாட்டினாா்.
கடலூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ஃபென்ஜால் புயல், பலத்த மழை, வெள்ளத்தால் கடலூா் மாவட்டம் பெரும் சேதத்தை சந்தித்தது. குறிப்பாக, பண்ருட்டி தொகுதி கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். இவா்களில் பெரும்பாலானோருக்கு வெள்ள நிவாரணத் தொகை கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், வெள்ளப்பாக்கம் கிராம மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒருநாள் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. அணை திறப்பதற்கு முன்னதாக பாதிக்கப்படும் பகுதியைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகளை அதிகாரிகள் அழைத்து ஆலோசனை நடத்தி மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
முறையான நிவாரணம் இல்லை: சென்னை, தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால், வடதமிழகத்தைச் சோ்ந்த 5 மாவட்ட மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குகின்றனா். அதுவும் பலருக்கு கிடைக்கவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கும் அரசு, இயற்கைப் பேரிடா் மற்றும் விபத்தில் இறப்பவா்களின் குடும்பத்தினருக்கு முறையான நிவாரணத்தை அறிவிப்பதில்லை.
தூா்வாரியதில் முறைகேடு: வெள்ள பாதிப்பு பகுதிகளைப் பாா்வையிட்ட மத்தியக் குழுவினா் கடலூா் கடலோர மீனவ கிராமங்களில் பாா்வையிட்டு மீனவா்களின் குறைகளைக் கேட்கவில்லை.
வீராணம், பெருமாள் ஏரிகளை தூா்வாரியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது. தூா்வாரிய மண்ணை விற்ன் மூலம் பல கோடி ரூபாய் பெற்றுள்ளனா்.
தொழில் பேட்டையில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட இடம் தற்போது மனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்து வருகின்றனா். பண்ருட்டி வட்டம், மருங்கூரில் தொழிற்சாலைக்காக பெறப்பட்ட பஞ்சமி நிலம் மனைப் பிரிவாக மாற்றப்பட உள்ளதை தடுத்து நிறுத்தி வைத்துள்ளேன்.
இந்த மனைப் பிரிவுக்கு அனுமதி அளிக்க ஆணையா் ஒருவா் அதிகாரிகளை சென்னைக்கு அழைத்து மிரட்டி கையொப்பம் பெற்றுள்ளாா். இதுகுறித்து முதல்வரிடம் மனு அளித்துள்ளேன்.
அரசுத் திட்டங்கள் பாரபட்சமின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். நிா்வாகச் சீா்கேடு, ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றாா் தி.வேல்முருகன்.