நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டுவதை தடுக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுப்பு!
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவிவித்துள்ளார்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண் கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதுவரை கண்ணாடி மணிகள் கல் மணிகள், சூது பவள கல் மணிகள், முழுமையான சங்கு வளையல், பழங்கால சிகை அலங்காரத்துடன்கூடிய பெண்ணின் தலைப் பகுதி, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு நாயக்கா் கால செப்புக் காசு, அணிகலன்கள், திமிலுடன்கூடிய காளை உருவப் பொம்மை உள்ளிட்ட 1,800-க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழாய்வில் பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருள்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:
''சுறா ஏறுஎழுதிய மோதிரம் தொட்டாள்'' எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள் அணிகலன்களை வடிவமைத்து அணிந்தனர் என்பது புலனாகிறது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருள்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இத்தகு சான்றுகள், அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி மக்களின் வடிவமைப்பு கலையை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளன என்று தெரிவித்தார்.