Dhoni: "எனக்கு ஊசின்னா பயம்; உடம்புதான் எல்லாமே" - தோனி சொல்லும் ஹெல்த் அட்வைஸ்க...
வெறுப்பரசியலுக்கு இரையாக்கப்படும் விளையாட்டு போட்டிகள் - இதுதான் உங்க தேசப்பற்றா?
'புறக்கணித்த இந்தியா!'
ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கான 'World Championship of Legends' என்ற தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் அரையிறுதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஆட வேண்டும். ஆனால், பஹல்காம் அட்டாக்கை குறிப்பிட்டு பாகிஸ்தானுடனான போட்டியில் ஆட மாட்டோம் என இந்திய அணி தொடரிலிருந்தே விலகியிருக்கிறது.
முன்னதாக லீக் சுற்றிலும் பாகிஸ்தானுடனான போட்டியிலிருந்து இந்திய அணி வெளியேறியிருந்தது. இந்த சம்பவம்தான் 'தேசப்பற்று' சார்ந்து பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

'தனியாரின் முடிவு?'
முதலில் இந்த League யை அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போர்டுகள் இணைந்து நடத்தவில்லை. தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் தொடர் இது. அதனால் இந்தியாவில் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பிசிசிஐக்கும் அந்த அணிக்கும் பெரியளவில் தொடர்பு கிடையாது. ஆனால், அதற்காக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதை எதோ ஒரு தனியார் முதலாளி எடுக்கும் முடிவாக மட்டும் பார்க்க முடியாது.
'கிரிக்கெட் அரசியல்...'
இந்திய அரசாங்கம் மற்றும் ஆளும் அரசியலர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதன் பிரதிபலிப்புதான் இந்த புறக்கணிப்பு நடவடிக்கை. தொடர்ச்சியாக கிரிக்கெட் ஒரு அரசியல் ஆயுதமாக மத்தியில் ஆளும் அரசுகள் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, பாகிஸ்தானை முன்வைத்து தங்களுக்கு லாபமூட்டும் தேசப்பற்று அரசியலை முன்னெடுக்க கிரிக்கெட் அவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
'காங்கிரஸ் தொடங்கிய ஆட்டம்!'
ஐ.பி.எல் இல் ஆட பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வரக்கூடாதென காங்கிரஸ் ஆட்சியில்தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை பிடித்துக் கொண்டு இன்னும் உக்கிரமாக வெறுப்பரசியலை முன்னெடுத்தது பாஜக. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நாங்கள் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை மட்டுமே தாக்கினோம். பாகிஸ்தான் இராணுவத் தளங்களையோ மக்களையோ தாக்கவில்லை என மோடி பேசுகிறார்.
'நாடாளுமன்றத்தில் மோடி...'
அதேமாதிரி, பதற்றச்சூழலை தீவிரப்படுத்தும் எண்ணமோ தாக்குதலை விரிவுப்படுத்தும் நோக்கமோ தங்களுக்கு இருந்திருக்கவில்லை என்பதையும் மோடி திரும்ப திரும்ப கூறுகிறார். அதாவது, தாங்கள் அமைதியைத்தான் விரும்புவதாகவும் அமைதியை மட்டுமே முன்னெடுப்பவர்களாக இருப்பதாகவுமே மோடி தன்னுடைய அரசை சித்தரிக்கிறார். இது புத்தர்களின் பூமி. அமைதியின் பூமி என்றெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசுகிறார். அமைதியின் தூதுவர் எதற்காக விளையாட்டை வைத்துக் கொண்டு வெறுப்பரசியலையும் தங்களுக்கு தேர்தல் லாபமூட்டும் தேசப்பற்றையும் தூண்ட வேண்டும்?
லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தான் போட்டியை புறக்கணித்ததை ஒரு புறம் வைத்துவிடுவோம். செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் ஆசியக்கோப்பைப் போட்டிகள் நடக்கிறது. அதற்கான அட்டவணை வெளியாகியிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே க்ரூப்பில் இருக்கின்றன. இரண்டு அணிகளும் லீக் போட்டியில் மோதவும் போகின்றன. பிசிசிஐயின் ஒப்புதலுடன் தான் இந்த அட்டவணை வெளியாகியிருக்கக்கூடும்.
லெஜண்ட்ஸ் அணி பாகிஸ்தானோடு ஆடக்கூடாதெனில், இந்த இந்திய அணி மட்டும் பாகிஸ்தானோடு ஆடலாமா? அப்போது இந்த தேசப்பற்று எங்கே போகும்? பஹல்காம் தாக்குதல் நடந்த போது இனி பாகிஸ்தான் கிரிக்கெட்டோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என பேசியதெல்லாம் என்னவாகும்?
'ஒளிபரப்பு வியாபாரம்..'
இந்த இரட்டை நிலைப்பாடுதான் கேள்விக்குரியதாக இருக்கிறது. உலகளவில் கிரிக்கெட் ஒளிபரப்பு என்பது பெரிய சந்தையாக இருக்கிறது. பல்லாயிரம் கோடிகளை கொடுத்து ஒளிபரப்பு உரிமைகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்கி வைத்திருக்கின்றன. அவர்கள் நினைக்கும் அளவுக்கு எல்லா போட்டிகளும் கல்லா கட்டி விடுவதில்லை. பெரிய அணிகள் மோதும் போட்டிகள் + இந்தியா - பாகிஸ்தான் போன்ற பில்டப் ஏற்றப்பட்ட போட்டிகள் இவற்றின் விளம்பர வருவாய்கள் மூலம்தான் அந்த முதலீட்டையே எடுக்க முடியும். 2007 ஓடிஐ உலகக்கோப்பை எல்லாருக்கும் நியாபகமிருக்கும்.

வியாபாரரீதியாக அது தோல்விகரமான உலகக்கோப்பை. அதற்கு மிக முக்கிய காரணம் இந்தியாவும் பாகிஸ்தானும் அந்தத் தொடரில் மோதிக் கொள்ளவே இல்லை. அதன்பிறகு நடந்த எல்லா தொடரிலுமே பெரும்பாலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி தவறாமல் இடம்பெற்றிருக்கும். ஆக, இவர்களின் தேசப்பற்றை காரணம் காட்டி பாகிஸ்தானோடு இனி விளையாடமாட்டோம் என ஒரு முடிவை எடுத்தால், கிரிக்கெட் வணிகத்தில் பெரிய ஓட்டை விழும். குறிப்பாக, ஐ.சி.சி தொடர்களின் சுவாரஸ்யமும் குறையும். பார்வையாளர்களின் எண்ணிக்கையும் சரிவடையும்.
இந்தியாவில் விளையாட்டுகள் ஒளிபரப்பு என்பதே ஒற்றை எதேச்சைத் தன்மையை எட்டிவிட்டது. மத்திய அரசுக்கு நெருக்கமாக இருக்கும் ஒரே தொழிலதிபரின் நிறுவனம்தான் அத்தனைப் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையையும் வைத்திருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி இனி இல்லையென்றால், அவர்கள் தலையில் இடி விழுந்ததைப் போல இருக்கும்.

ஆசியக்கோப்பையின் அட்டவணை வெளியீடும், பிசிசிஐ அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் ஏற்றுக்கொண்டு நிற்பதையும் வியாபாரத்தின் பக்கம் நின்றுதான் பார்க்க வேண்டும். யதார்த்த நிலைமை இப்படி இருக்க கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானை வில்லனாக காண்பித்து தங்களுக்கான தேசப்பற்றை அறுவடை செய்துகொள்ள விழைவதை ஏற்க முடியாது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஆசியக்கோப்பையில் நடக்கப்போவது உறுதி. ஒருவேளை மத்திய பாஜக அரசு தங்களின் தேசப்பற்றை காட்ட நினைத்தால், இப்போதே பிசிசிஐ மூலம் அந்தத் தொடரிலிருந்து வெளியேறும் முயற்சிகளை எடுக்கலாம். அப்படி செய்யாமல் விட்டுவிட்டு தொடர் நெருங்குகையில் சூழலை பரபரப்பாக்கி, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை அரசியல் விவாதமாக்க மாற்ற முனைந்தால் அது விளையாட்டின் ஆன்மாவுக்கே செய்யும் துரோகம். இதை இந்தியா மட்டும் செய்யவில்லை.
பாகிஸ்தானும் அதையேத்தான் செய்து கொண்டிருக்கிறது. தங்களின் ஹாக்கி அணிகளை இந்தியாவுக்கு அனுப்பமாட்டோம் என பாகிஸ்தான் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒன்று இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் நடக்கவிருக்கிறது. அந்தத் தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கப்போவதில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது.
'மக்களை இணைக்கும் விளையாட்டு...'
1999 சென்னை டெஸ்ட் அனைவருக்கும் இன்றைக்கும் நியாபகமிருக்கும். இந்திய அணியை தோற்கடித்து பாகிஸ்தான் வென்ற போது, அந்த அணியாக நன்றாக ஆடியதென எழுந்த நின்று கைத்தட்டிய ரசிகர் கூட்டம் இங்கே இருக்கிறது.
2023 இல் ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடந்திருந்தது. அப்போது பாகிஸ்தான் ஹாக்கி அணியின் கேப்டனுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்களின் ஆதரவிலும் இங்கிருக்கும் நிர்வாகிகளின் உபசரிப்பிலும் அவர் நெகிழ்ந்து போயிருந்தார்.
பாகிஸ்தானிலும் தோனிக்கும் கோலிக்க அத்தனை ரசிகர் கூட்டம் இருக்கிறது. இடையில் நிற்கும் அரசுகள்தான் அரசியல் லாபத்துக்காக விளையாட்டின் மீது கொடிய கரங்களை பரப்பியிருக்கின்றன.
விளையாட்டு பேதங்களை மறக்கடிக்கும் சக்தியை கொண்டது. விளையாட்டின் வழி சகோதரத்துவத்தை முன்னெடுக்க இயலும். விளையாட்டு மக்களை ஒன்றிணைப்பதற்கான கருவி. இதையெல்லாம் விடுத்து அரசியலுக்காக மட்டுமே கிரிக்கெட்டை பயன்படுத்துவோமென்றால், இருதரப்பிடமும் கேட்பதற்கு ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது. இதுதான் உங்கள் தேசப்பற்றா?