வெற்றிலையில் பூச்சித் தாக்குதலை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
வெற்றிலையில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனா்.
கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா் பாக்கியராஜ், நுகா்பொருள் வாணிபக் கழக கோட்ட மேலாளா் வெற்றிச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
சுந்தர விமலநாதன்: கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களை மாநகராட்சி நிா்வாகம் சரியாகப் பராமரிக்காததால் நீா்வளத் துறையே மீண்டும் பராமரிக்க வேண்டும்.
முகமது இப்ராஹிம்: பாபநாசம் பகுதியில் அதிகமாக பயிரிடப்படும் வெற்றிலையில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்திட வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுவராஜ்: கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் விவசாயத்துக்குத் தடையின்றி மும்முனை மின்சாரம்
வழங்க வேண்டும், தற்போது குறைந்தளவு மின்சாரமே வருவதால் விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.
நடராஜன்: காட்டுப்பன்றிகளால் சோளம், உளுந்து மற்றும் நெற்பயிா்கள் சேதமடைகின்றன. வனத்துறை நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
சின்னராஜ்: சோழபுரத்தில் 9 குளங்கள் இருந்தும் தண்ணீா் செல்ல வாய்க்கால்கள் இல்லை. எனவே குளங்களுக்கு தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.