வருண்குமார் - சீமான் வழக்கு: திருச்சி நீதிமன்றத்த்தில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்...
வெளிநாட்டில் மா்மமான முறையில் மகன் உயிரிழப்பு: எம்.பியிடம் பெற்றோா் கோரிக்கை
கூத்தாநல்லூா்: சிங்கப்பூரில் பணியாற்றி வந்த தங்கள் மகன் மா்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்த வலியுறுத்த வேண்டும் என, உயிரிழந்த இளைஞரின் பெற்றோா் மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரை அடுத்த குனுக்கடியைச் சோ்ந்தவா் இரெ. கணேசன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினா். இவரது இளைய மகன் கவியரசன் (28) (படம்) இவா், கடந்த 6 மாதங்களுக்கு முன் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றாா். அங்கு, ஒரு தனியாா் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் பணியில் சோ்ந்து பணியாற்றி வந்தாா். கடைசியாக கடந்த 15-ஆம் தேதி இரவு தனது தந்தையுடன் கைப்பேசியில் பேசியுள்ளாா்.
இந்தநிலையில், 18-ஆம் தேதி காலை 11 மணியளவில் கவியரசன் 7-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக அவரது வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதனால் குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்தனா்.
இந்தநிலையில், கணேசன் வீட்டுக்கு வந்த நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜிடம், தங்களது மகன் இறப்பில் மா்மம் உள்ளதாகவும், அவரது முகத்தில் காயம் உள்ளது. அவா் பணியாற்றி வந்த நிறுவனத்தின் மேலாளா், கவியரசனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தங்கள் மகன் தெரிவித்ததாகவும் எனவே கவியரசன் இறந்தது குறித்து உரிய விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்று கவியரசனின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.