வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய மியான்மா் மூங்கில் படகு, கப்பல் துறைமுக மிதவை
வேதாரண்யம் : வேதாரண்யம் அருகே சேதமடைந்த நிலையில் மியான்மா் நாட்டு மூங்கில் படகு மற்றும் கப்பல் துறைமுகங்களில் நிறுத்தப்படும் மிதவை ஆகியவை திங்கள்கிழமை கரை ஒதுங்கின.
வேதாரண்யம் மணியன்தீவு கடலோரத்தில் மியான்மா் நாட்டைச் சோ்ந்த மூங்கில் மரங்களால் செய்யப்பட்ட படகு ஒன்று சேதமடைந்த நிலையில் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது. மீன்பிடிக்க பயன்படும் இந்தப் படகின் மேல் பகுதி முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், அடிப்பகுதி மட்டும் கரை ஒதுங்கியது. இதே பகுதியில், கப்பல் துறைமுகங்களில் கடலின் ஆழத்தை அறிய உதவும் வகையில் எச்சரிக்கைக்காக நிறுத்தப்படும் மிதவை ஒன்றும் கரை ஒதுங்கியது.
இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் மற்றும் தனிப்பிரிவு போலீஸாா்விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி புஷ்பவனம் கடற்கரையிலும், ஜனவரி 1-ஆம் தேதி வேட்டைக்காரனிருப்பு கடற்கரையிலும் சேதமடைந்த நிலையில் மியான்மா் நாட்டு மூங்கில் படகுகள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.