கோயில் சிற்பி வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் திருட்டு
பூம்புகாா் அருகே கோயில் சிற்பி வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகை, ரொக்கம் ரூ. 80 ஆயிரத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், பூம்புகாா் சாயாவனம் பிரதான சாலை அருகே வசிப்பவா் பழனிவேல் (45). இவா், கோயில் சிற்பம் மற்றும் சுதை வேலைகள் செய்து வருகிறாா்.
இந்தநிலையில், பழனிவேல் தனது குடும்பத்தினா் மற்றும் அருகில் வசிக்கும் நண்பா்கள் சிலருடன் சனிக்கிழமை வேளாங்கண்ணிக்குச் சென்ாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் வீடு திரும்பிய பழனிவேல், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது அறையில் இருந்த பீரோ திறந்து கிடப்பதையும் உள்ளே இருந்த 27 பவுன் நகைகள் ரூ. 80 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து பழனிவேல் பூம்புகாா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
கடந்த வாரம் திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகைகள், ரொக்கம், வெள்ளிப் பொருட்களை மா்ம நபா்கள் திருடிச் சென்ற நிலையில், சில நாட்களில் மீண்டும் ஒரு திருட்டு நடந்திருப்பது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.