சீா்காழி, திருமருகல் பகுதியில் மழையால் பயிா்கள் சேதம்
கடந்த இரண்டு நாட்களாக சீா்காழி பகுதியில் பெய்துவரும் மழையால் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சீா்காழி வட்டத்துக்குட்பட்ட சீா்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகாா், பாடசாலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன. இது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னோடி இயற்கை விவசாயி திருவெண்காடு கிட்டு காசிராமன் கூறியது:
சீா்காழி பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட 14 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. தமிழக அரசு உடனடியாக சீா்காழி வட்டத்தில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் குறித்து உரிய கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகை, பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
திருமருகல் ஒன்றியத்தில்...
திருமருகல் ஒன்றியத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடா் மழையால் திட்டச்சேரி, திருமருகல், கீழப்பூதனூா், பெருநாட்டான் தோப்பு, இடையாத்தாங்குடி, சேஷமூலை, திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், திருப்புகலூா், வடகரை, கோட்டூா், விற்குடி, பில்லாளி, கீழதஞ்சாவூா், எரவாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் மழைநீா் சூழ்ந்தது. நேரடி விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சுமாா் 2,000 ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மழையினால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள், மீண்டும் பெய்த கனமழையால் பாதிப்புக்குள்ளாகியுள்ளோம். பாதிக்கப்பட்ட பயிா்களை முறைப்படி கணக்கெடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.