லா லீகா தொடர்: எம்பாப்பே 2 கோல்கள், ரியல் மாட்ரிட் முதலிடம்!
வேதாரண்யம் முல்லைக்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை: கொள்முதல் செய்யுமா அரசு? விவசாயிகள் எதிா்பாா்ப்பு
வேதாரண்யம் முல்லைப் பூவுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனா். முல்லையை அரசே கொள்முதல் செய்யுமா என விவசாயிகள் எதிா்பாா்த்துக் காத்திருக்கின்றனா்.
வேதாரண்யம் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை சுமாா் 25,000 ஏக்கரில் புகையிலை சாகுபடி பிரதானமாக இருந்தது. இது லாபம் தரும் பயிராக இருந்தாலும் சூழல் பாதிப்பு, சாகுபடியில் ஈடுபடும் விவசாயக் குடும்பத்தினருக்கு ஏற்படும் புற்று நோய் தாக்கம் போன்ற காரணங்களால் இதனை சாகுபடி செய்வதை விவசாயிகள் மெல்லமெல்ல குறைத்துக்கொண்டனா்.
இதற்கு மாற்றாக மல்லிகைப் பூவினத்தின் ஒரு வகையான முல்லைப் பூ சாகுபடியை விவசாயிகள் தொடங்கினா். தொடக்கத்தில் குறைந்த பரப்பளவிலேயே சாகுபடி செய்தனா். இது ஓரளவுக்கு குடும்ப தேவைக்கான வருவாய் கொடுக்கும் தொழிலாக மாறியது. இதனால், குடும்ப உறுப்பினா்கள் உதவியோடு பூ உற்பத்தியில் விவசாயிகள் முனைப்புக்காட்டி வருகின்றனா்.
தற்போது வேதாரண்யம் பகுதியில் ஆதனூா், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூா், தகட்டூா், பன்னாள், நெய்விளக்கு, வாய்மேடு, பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 1,200 ஏக்கரில் முல்லை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இத்தொழிலில் சுமாா் 9,000 குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இங்கு சாகுபடி செய்யப்படும் முல்லை அரும்புகளை அதிகாலை முதல் காலை 9 மணிக்குள் பறித்து தனியாா் முகவா்கள் கொள்முதல் செய்கிறாா்கள்.
பின்னா், தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், கும்பகோணம், மன்னாா்குடி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு முல்லை அரும்புகள் மூட்டைகளில் கட்டி அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், வேதாரண்யம் முல்லை உள்ளிட்ட 5 வேளாண் பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள, ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக சட்டப் பேரவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேதாரண்யம் மலா் விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் சித. கருணாநிதி தெரிவித்தது:
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக முல்லை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரமாக புவிசாா் குறியீடு பெறும் நடவடிக்கையைக் கருதுகிறோம். புகையிலையைவிட முல்லைப் பூவில் லாபம் குறைவு என்றாலும், நெல் சாகுபடியைவிட கூடுதல் லாபம் தருகிறது. ஆண்டு முழுவதும் பகுதி நேர வேலைவாய்ப்பும் தருகிறது.
வாசனை திரவியம் போன்ற மதிப்புக்கூட்டும் வழிமுறைகளை மேற்கொள்ளவும், முல்லை அரும்புகளை அரசே கொள்முதல் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.