வேலூர்: "குளிக்கிறப்ப வீடியோ கால் பண்ணு..." - மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது
வேலூர் கொணவட்டம் மதினாநகரைச் சேர்ந்தவர் முகமது சானேகா (35). இவர் தனியார்ப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் மாலை வீட்டுக்குச் சென்ற பிறகு வீடியோ காலில் பேசச் சொல்லி, ஆபாச செயல்களில் ஈடுபடவும் கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார் ஆசிரியர் முகமது சானேகா. மாணவி மறுத்தபோது, "தேர்வில் மதிப்பெண் குறைத்து வழங்குவேன்" எம் ஆசிரியர் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் பயந்துபோன மாணவி, ஆசிரியருடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார். "குளிக்கும் போதும் வீடியோ காலில் பேச வேண்டும்" என்றும் ஆசிரியர் மிரட்டிவந்திருக்கிறார்.
ஆசிரியரின் மிரட்டல் போக்கு நாளுக்கு நாள் அதிகமானதால், மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி நேற்று முன்தினம் வீட்டிலிருந்தபோது தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதிர்ந்துபோன பெற்றோர் மகளைக் காப்பாற்றிக் கண்டித்திருக்கின்றனர்.
இதையடுத்து, தனக்கு நேர்ந்த தொந்தரவு குறித்துப் பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரியப்படுத்தியிருக்கிறார் அந்த மாணவி. திடுக்கிட்டுப்போன பெற்றோர் தாமதிக்காமல், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் `போக்சோ’ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆசிரியர் முகமது சானேகாவை நேற்று கைது செய்தனர்.