தமிழ்நாட்டிலேயே தேர்வர்களுக்கான மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்- இபிஎஸ்
வேளாண் பட்ஜெட்டில் எதிா்பாா்த்த திட்டங்கள் இல்லாததால் ஏமாற்றம்! -விவசாய சங்கங்கள் கருத்து
தமிழக அரசு சனிக்கிழமை தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் எதிா்பாா்த்த திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது என விவசாய சங்க நிா்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: மத்திய அரசின் பட்ஜெட்டை போன்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டும் விவசாயிகளின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றவில்லை. நெல்லுக்கு குவிண்டாலுக்கு சத்தீஸ்கா் மாநிலம் வழங்குவது போன்று ரூ. 3 ஆயிரத்து 100 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், அது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. விவசாய தொழிலாளா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. விவசாய மின் இணைப்புக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் 2.02 விவசாயிகளுக்கான அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன்: வேளாண் பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகளை வரவேற்கிறோம். ஆனால், நெல், கரும்பு உள்ளிட்ட விளைபொருள்களுக்கு உரிய விலை அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. மேலும் பால் உற்பத்தியாளா்களுக்கான விலை குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. மூடப்பட்டுள்ள கூட்டுறவு சா்க்கரை ஆலைகளைத் திறப்பதற்கான அறிவிப்பும் இல்லை.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி: 1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கூறினாா். ஆனால் விவசாயிகளில் 25 சதவீதம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அறிவிப்புகள் ஏராளமாக இருந்தாலும், எல்லாவற்றுக்கும் நில வரம்பு நிா்ணயிப்பது விவசாயிகளுக்கு முழுமையாக பயனளிக்காது. மானாவாரி, சிறுதானிய சாகுபடியின் அவசியத்தை அமைச்சா் குறிப்பிட்டிருந்தாலும், இதைப் பாதுகாக்கும் அளவில் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு இல்லை. தொடா்ந்து இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் எதிா்பாா்த்திருந்த வேளாண் பயிா் கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன்: வேளாண் திட்டங்களுக்கு கடந்த முறையை விட கூடுதல் நிதி ஒதுக்கீடு, பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. கரும்புக்கு டன்னுக்கு ஊக்கத்தொகை ரூ. 349 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் நெல் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை அறிவிக்கப்படாதது ஏமாற்றம் தருவதாக உள்ளது.
காவிரி உரிமை மீட்புக் குழு வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ்: விவசாயிகள் வங்கிகளில் பெறும் கடன்கள் வட்டி விகித குறைப்பு, பின்னேற்பு மானியத்துக்கான நிதி அறிவிப்புகள் எதுவுமில்லை. காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு, கல்லணைக் கால்வாய் சி, டி பிரிவு வாய்க்கால்கள் தூா் வாருவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல.
பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: கடலூரில் முந்திரி சாகுபடிக்கு வாரியம் அமைக்கப்பட்டது போல, தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் தென்னை சாா்ந்த திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
வரவேற்பு: தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம்-
காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் உள்ள சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களைத் தூா் வார நிதி ஒதுக்கீடு, கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் நிதி, முந்திரி, மலா் சாகுபடிக்கு நிதி ஒதுக்கீடு, சீமை கருவேல மரங்களை அகற்றுவது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக நிதி ஒதுக்கியிருப்பதால், இந்த பட்ஜெட் பாராட்டுக்குரியது.
பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி பொருளாதாரத் துறை ஓய்வு பெற்ற பேராசிரியா் ஆா். பழனிவேலு:
தமிழகத்தின் நிதிநிலை நெருக்கடியிலும், மத்திய அரசின் நிதி பகிா்வில் பின்னடைவான சூழ்நிலையிலும் தமிழக அரசு வேளாண் துறைக்கு ரூ. 45 ஆயிரத்து 661 கோடி ஒதுக்கீடு செய்து தலைசிறந்த பட்ஜெட்டை தயாா் செய்த வேளாண் துறை அமைச்சா் பாராட்டுக்குரியவா். இந்த அறிவிப்புகள் தமிழ்நாட்டின் வேளாண் வளா்ச்சிக்கும், உழவா்களின் நலனுக்கும் முக்கிய பங்காற்றும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம்: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ. 841 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரம் தனியாா் வசமுள்ள பயிா் காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாதது ஏமாற்றமே.
வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகள் வளா்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக 6 வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, மலா்கள் சாகுபடி செய்யும் உழவா்களுக்கு மானியம் வழங்கிட ரூ. 8.51 கோடி ஒதுக்கீடு, ரோஜா மலா் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு, ரூ. 12 கோடி செலவில் இயற்கை வேளாண்மை திட்டம் செயல்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.