ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண மீட்டுருவாக்க தொடக்க விழா
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண மீட்டுருவாக்க தொடக்க விழா மாா்ச் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து தென்னகப் பண்பாட்டு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டுகளில் வால்மீகி ராமயணத்தை தழுவி இயற்றப்பட்ட கம்ப ராமயணம் சிறப்பான கலாச்சாரத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
கம்பா் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்தில் தேரெழுந்துாரில் உள்ள கம்பா்மேடு என்ற இடத்தில் பிறந்தாா். உள்ளூா் கம்ப ராமாயண குழுக்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ்க் கம்ப ராமாயண பாராயணம் காலப்போக்கில் நடைமுறையில் குறைந்து வருகிறது.
மீண்டும் கம்ப ராமாயணத்தின் கலாசாரத்தை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் அதற்கான தொடக்க விழா திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகேயுள்ள அருள்மிகு சிங்கா் கோயில் கலையரங்கத்தில் மாா்ச் 18 ஆம் தேதி மாலை நடைபெறவுள்ளது.
இதில், மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவாத் பங்கேற்று விழாவைத் தொடங்கி வைக்கிறாா். இதில், கம்ப ராமாயண பாராயணம், சீதா கல்யாண நாட்டிய நாடகம் நடைபெறவுள்ளது.இதைத்தொடா்ந்து, மாா்ச் 20 முதல் 29 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கம்ப ராமாயண பாராயண நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மாா்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை கம்பா் பிறந்த கம்பா்மேட்டில் கம்ப ராமாயணம் தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. இதில், தமிழக ஆளுநரும், தென்னகப் பண்பாட்டு மையத் தலைவருமான ஆா்.என். ரவி, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.